மோட்டார் சைக்கிள் விபத்தில் 6 வயது சிறுவன் பலி !

11924

கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்ன புல்லுமலை பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை  நண்பகல் 12.30 மணியளவில்  இடம்பெற்ற வாகன விபத்தில் 6 வயது சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக கறடியனாறு பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தில்  மேலும் மூவரான ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்  படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நாவற்குடாவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் தந்தை உள்ளிட்ட 2 பிள்ளைகளும் மரப்பாலம் பகுதியில் இருந்து மட்டக்களப்பை நோக்கி  மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது மற்றுமொரு மோட்டார் சைக்கிள் முந்திச் செல்ல முயற்சித்த போதே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.

ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் தாய், தந்தை மற்றும் சகோதரி உள்ளிட்ட மூவரும் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் காயங்களுக்குள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறுவனின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.