மன்னாரில் தேர்தல் சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பான கலந்துரையாடல்

முன் மொழியப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு தீர்மானங்களை முறை படுத்துவதற்காகவும், மக்கள் மயப்படுத்தப்படுவதற்காகவும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் தேர்தல் சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணிவரை மன்னாரில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம் பெற்றது.

மன்னார் மாவட்ட பதில் உதவி தேர்தல் ஆணையாளர் கந்தையா நிமலரூபன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல்.ஜி.புஞ்சிஹேவா, தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க,ஜனநாயக சீர்திருத்தம் மற்றும் தேர்தல் ஆய்வுகள் நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க ,தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இதன் போது மன்னார் மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள்,உறுப்பினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சிவில் அமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளனர்.

குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் தமது கருத்துக்களையும்,ஆலோசனைகளையும் முன் வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.