மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் படுகொலை (படங்கள் இணைப்பு)

-மட்டக்களப்பு நிருபர்-

மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள கிளிவெட்டி பாரதிபுரம் கிராமத்தில் குடும்பஸ்தர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உடற் கூறாய்வுப் பரிசோதனைகளின் பின்னர் சடலம் இன்று வியாழக்கிழமை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, கிளிவெட்டி பாரதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான மூன்று பிள்ளைகளின் தந்தை சோமசுந்தரம் சிறிகந்தராசா (வயது 50) என்பவரே குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அன்றைய தினம் மின்சாரம் தடைப்பட்டிருந்த சமயத்தில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றிருப்பதாக கிராமத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

சிறிகந்தராசாவின் வீட்டுக்கு வந்து அவரை வெளியே வருமாறு அழைத்த சந்தேக நபர், அவரை தன்வசம் வைத்திருந்த கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக பாரதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த அருமைத்துரை கிருபாகரன் (வயது 47) எனும் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.