கிழக்கில் 96,460 ஹெக்டெயரில் சிறுபோக நெற்செய்கை அறுவடை

-கல்முனை நிருபர்-

இம்முறை மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் குறைந்தளவிலே சிறுபோக நெற்செய்கை பண்ணப்பட்டுள்ளதுடன்.

தற்போது அதற்கான அறுவடைகள் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றன.

இதற்கமைய, மட்டக்களப்ப மாவட்டத்தில் 32260 ஹெக்டெயரிலும், அம்பாறை மாவட்டத்தில் 64200 ஹெக்டெயரிலும் சிறுபோக நெற்செய்கை பண்ணப்பட்டிருந்தன.

இங்குள்ள விவசாயிகள் மிகுந்த சிரமங்களுககு மத்தியிலே தங்களது நெற்செய்கை செய்திருந்தனர்.

தற்போது அறுவடை காலம் ஆரம்பித்துள்ள நிலையில் அறுவடை இயந்திரங்களுக்கான போதியளவு டீசல் கிடைக்காமையால் குறித்த காலப்பகுதிக்குள் அறுவடை செய்து முடிக்க முடியாதுள்ளதாக விசனம் தெரிவிக்கின்றனர்.

உரத்தட்டுப்பாட்டுக்கு மத்தியில் 40 ஆயிரம் ரூபாவிற்கு உரம் பெற்று, இரசாயன எண்ணை 20 ஆயிரம் ரூபாவுக்கு பெற்று, தங்க நகைகளை அடகு வைத்து குத்தகைப்பணம் கொடுத்து, எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு முகம் கொடுத்து இச் சிறுபோக நெற்செய்கையை செய்த போதிலும் ஒரு ஏக்கருக்கு 10 தொடக்கம் 15 வரையான நெல் மூட்டையே கிடைக்கின்றது, என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

சிறுபோக அறுவடையை சுமூகமாக மேற்கொள்வதற்கு எரிபொருளின் விலையேற்றம் மற்றும் தொடர்ச்சியாக குறித்த அளவுக்கு மேலதிகமாக டீசல் கிடைக்காமை போன்ற காரணங்களால் அறுவடைச் செலவும் அதிகரித்துள்ளது.

இதனால் கிழக்கில் அதிகளவிலான விவசாயிகள் தங்களது நெற்செய்கையை கைவிட்டுச் செல்லும் துர்பாக்கிய நிலைக்குச் சென்றுள்ளனர்.

எதிர்வரும் பெரும்போகச் செய்கையை செய்வதற்கு மானிய அடிப்படையில் உரம் வழங்கப்பட வேண்டும் அத்துடன் விவசாயிகளுக்குரிய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவேண்டும்.

இதனை இடைக்கால வரவு செலவு திட்டத்தில் அரசாங்கம் உள்ளடக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.