மனைவியை நாடு திரும்புமாறு வற்புறுத்தி : 5வயது மகனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய தந்தை கைது

வெளிநாட்டில் தொழில் புரியும் தனது மனைவியை நாடு திரும்புமாறு வற்புறுத்தி தனது ஐந்து வயது மகனை கொலை மிரட்டல் விடுத்து , துன்புறுத்தி வந்த தந்தையை குளியாப்பிட்டிய பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரான தந்தை தனது ஐந்து வயது மகனின் கழுத்தில் கூரிய ஆயுதத்தை வைத்து வீடியோ படம் எடுத்து மனைவி மற்றும் வேலை வாய்ப்பு நிறுவனத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த காணொளியை வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் பெற்றுக் கொண்டதன் பேரில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வகையில் சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும், குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

கழுத்தில் கத்தியை அழுத்தியதில் காயங்களுக்கு உள்ளான சிறுவன் குளியாப்பிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தன்னை தனது பாட்டியுடன் வாழ அனுமதிக்குமாறும், தன்னை கொடுமைப்படுத்திய தந்தையிடம் ஒப்படைக்க வேண்டாம் என்றும் சிறுவன் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.