மண்ணெண்ணை இல்லாமல் திண்டாடும் மீனவர்கள்

41

-யாழ் நிருபர்-

மண்ணெண்ணெய் இன்மையினால் வடக்கு மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள், என குருநகர் கடற்தொழில் அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் ஜூலியன் சகாயராஜா தெரிவித்தார்.

தற்போது வட பகுதி மீனவர்கள் எதிர்கொள்ளும் எரிபொருள் நெருக்கடி நிலவரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடபகுதியை பொறுத்தவரை எரிபொருள் பிரச்சனை ஒரு முக்கியமான பிரச்சினை காணப்படுகின்றது.

கடந்த ஆனி மாதம் 30ம் திகதி மண்ணெண்ணெய் வழங்கப்பட்டதற்கு பிற்பாடு எந்தவிதமான மண்ணெண்னையும் வழங்கப்படவில்லை.

டீசல் வாரத்திற்கு ஒருமுறை வழங்கப்படுகின்றது. கடற்தொழில் அமைச்சரின் முயற்சியின் பயனாக மயிலிட்டி துறைமுகத்தில் வாரத்தில் மூன்று நாட்களுக்கு 2000 லீற்றர் டீசல் வழங்கப்படுகின்றது.

வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து மீனவ தொழிலாளர்களும் மண்ணெண்ணெய் இல்லாததன் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பொதுவாக எரிபொருள் நாட்டின் முதுகெலும்பாக இருக்கிறது.

இந்த எரிபொருள் இல்லை என்றால் இந்த நாடே முடங்கவேண்டிய நிலை காணப்படும் தற்போது நாட்டில் அனைவருக்கும் அத்தியாவசியமான உள்ளது.

எரிபொருள் மாத்திரமே மீனவர்களை பொறுத்த வரைக்கும் டீசல் மண்ணெண்ணெய் எமக்கு தேவையாக உள்ளது.

எனவே, இந்த அரசாங்கமானது உரிய  மண்ணெண்னை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரு லீற்றர் மண்ணெண்னை 1300 ரூபாய்க்கு கறுப்பு சந்தையில் வாங்கி தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை காணப்படுகின்றது.

அந்த 1300 ரூபாய்க்கு வாங்கிய எண்ணை எவ்வாறு இலங்கை கடற்பரப்புக்குள் கொண்டுவரப்படுகின்றது? எவ்வாறு விற்பனை செய்யப்படுகின்றது என்பது அடுத்த கட்டம். ஆனால் ஒரு தொழிலாளி தான் தொழிலுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக 1300 ரூபாவிற்கு ஒரு லீற்றர் எண்ணை வாங்கி சென்று தனது வாழ்வாதாரத்தை முன்னெடுக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது

எனவே, மீனவர்களுக்கு தேவையான எரிபொருளினை இந்த அரசாங்கம் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்பொழுது சிறுபடகில் தொழில் ஈடுபடுபவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். குருநகர் பகுதியில் நூற்றுக்கு 90வீதமான தொழிலாளர்கள் வீட்டில் தான் இருக்கின்றார்கள், ஏனென்றால் தொழிலுக்கு செல்வதற்கு மண்ணெண்ணெய் இல்லை மண்ணெண்ணெய் என்பது ஒரு முக்கியமான பிரச்சினையாக காணப்படுகின்றது.

அவர்களுக்குரிய எரிபொருள் இலகுவாக கிடைக்கக்கூடிய சூழ்நிலையை அதாவது அதிக விலை என்றால் கூட அவர்கள் இலகுவாக எரிபொருளை பெறுவதற்குரிய வழிமுறைகள் ஏற்படுத்தப்படுவதன் மூலம் வடக்கு மீனவர்கள் வாழ்வாதாரத்தை முன்னெடுக்க முடியும், எனவும் தெரிவித்தார்.