பங்களாதேஷில் வரலாறு காணாத எரிபொருள் விலையேற்றம்

பங்களாதேஷில் எரிபொருள் விலைகள் 1971 இல் நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து காணப்படாத அளவுக்கு உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பங்களாதேஷ் அரசாங்கம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு எரிபொருள் விலையை 51.7 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.

இது இன்று சனிக்கிழமை முதல் அமலுக்கு வரும் என்று அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

புதிய விலை அறிவிப்பின்படி ஒரு லீற்றர் பெற்றோல் 135 டாக்கா (1.43 டொலர்) ஆகும். முன்னர் ஒரு லீற்றர் பெற்றோல் 89 டாக்காவாக இருந்தது.

டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலை 42.5 சதவீதம் அதிகரித்து லீற்றருக்கு 114 டாக்காவாக உள்ளது.

அரசு நடத்தும் விநியோக நிறுவனங்களின் மீதான மானியச் சுமையைக் குறைக்க சில்லறை விலையில் சமீபத்திய விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை பங்களாதேஷை விட அதிகமாக உள்ளது.

எரிபொருள் விலை உயர்வு பணவீக்கத்தை மோசமாக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பணவீக்கம் ஜூன் மாதத்தில் 7.56 சதவீதமாக அதிகரித்துள்ளது, இது சுமார் ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச வீதமாகும் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.