முன்மாதிரியாக செயற்பட்ட ஆலய நிர்வாகத்தினர்

61

-யாழ் நிருபர்-

சங்கானை, சண்டிலிப்பாய், பண்டத்தரிப்பு, சித்தன்கேணி பகுதிகளில் ஆலய திருவிழாக்களிலும் விசேட தினங்களிலும் அதிகளவான ஒலிபெருக்கள் பொருத்தி அதிகளவிலான இரைச்சலுடன் பாடல்கள் ஒலிக்கவிடுவது பல காலமாக இடம்பெற்றுவருகிறது.

இதனால், சிறுவர்கள், நோயாளர்கள், மாணவர்கள், வயது முதிர்ந்தோர் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

இது தொடர்பில் அவ்வப்போது பொலிஸ் நிலையங்களுக்கும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றவண்ணமுள்ளன.

அதனையும் தாண்டி ஆளுனர் மட்டங்களிலும் முறைப்பாடுகள் பல அனுப்பப்பட்டிருந்ததை அறிய முடிகின்றது.

குறிப்பாக சுரேன் ராகவன் அவர்கள் ஆளுனராக இருந்தபோது மக்களுக்கு தொல்லை கொடுக்கும் அதிகளவிலான ஒலிபெருக்கிகளையும் ஒலிப் பெட்டிகளையும் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார்.

அவரின் மாற்றத்துடன் அவையும் பின்பற்றப்படவில்லை. கடந்த இரண்டுவருடங்களாக கொரோனா கட்டுப்பாடுளால் ஆலயங்களில் கட்டுப்பாடுகளுடன் வழிபாடுகள் இடம்பெற்றமையால் மக்கள் பாரியளவு பாதிக்கப்படவில்லை.

ஆனால் இவ்வருடம் கட்டுப்பாடுகள் இன்மையால் மீண்டும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

ஆலயங்களில் வாடகைக்கு அமர்த்தப்படும் அதிகளவான ஒலிபெருக்கி மற்றும் ஒலிப்பெட்டிகளால் ஏற்படுத்தப்படும் அதிகளவான ஒலியினாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும் இவற்றை கருத்திற்கொண்டு சங்கானை செங்கற்படை மஹாதேவப்பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினர் இம்முறை ஏனைய ஆலயங்களுக்கு முன்மாதிரியாக சிறப்பான செயற்பாட்டினை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த 31 ஆம் திகதி் கொடியேற்றத்துடன் மஹோற்சவம் ஆரம்பித்து நடைபெற்றுவருகிறது. எனினும் ஆலய நிர்வாகத்தினர் ஆலயத்திற்குரிய ஒலிபெருக்கிகளை மட்டும் பயன்படுத்தி மட்டுப்படுத்திய ஒலியுடன் மஹோற்சவம் நடாத்தி வருகின்றனர்.

பெரும்பாலான உபயகாரர்கள் இம்முறையினையினையே பின்பற்றிவருவதால் பக்தர்கள் மன அமைதியுடனும் பக்கியுடனும் வழிபாடுகளில் ஈடுபடமுடிவதுடன் பொது மக்களும் பாதிப்பிற்குள்ளாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.