தலவாக்கலையில் வீட்டிற்குள் தவறி விழுந்த புலி- ஒருவர் படுகாயம்

59

தலவாக்கலை, லோகி தோட்டம் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த புலி பலத்த சிரமங்களின் மத்தியில் உயிருடன் பிடிக்கப்பட்டு, நுவரெலியா மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்ட லோகி தோட்டம் கூம்வூட் பிரிவிலுள்ள வீடொன்றுக்குள் நேற்று வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் நாயை துரத்தி வந்த புலி கூரையின் மேல் ஏறிய போது கூரை உடைந்து வீழ்ந்து வீட்டிற்குள் அகப்பட்டுக் கொண்டதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்போது வீட்டுக்குள் இருந்த புலியை பார்வையிட சென்ற குறித்த தோட்டத்தைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவர் புலியின் தாக்குலுக்கு இலக்காகி நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக லிந்துலை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து , நுவரெலியா வனஜீவராசிகள் திணைக்களத்தின் உதவியுடன் குறித்த புலியை கடும் சிரமத்துக்கு மத்தியில் மயக்க ஊசி செலுத்தி உயிருடன் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட புலி இலங்கைக்கு உரித்தான சுமார் 6 அடி நீளமான 5 முதல் 8 வயது மதிக்கத்தக்க ஆண் புலி என தெரியவருகின்றது.