குழந்தைப்பிள்ளைதனமான சைக்கிள் கட்சியுடன் சேர்ந்து ஜனாதிபதியை சந்திக்க முடியாது

57

-யாழ் நிருபர்-

குழந்தை பிள்ளைத்தனமான சைக்கிள் கட்சியுடன் சென்று ஜனாதிபதியை சந்திக்க தான் விரும்பவில்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

நேற்று வியாழக்கிழமை யாழ். நல்லூரில் அமைந்துள்ள அவரது வீட்டில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் விக்னேஸ்வரனிடம் ‘தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்துள்ளார். தங்களையும் சந்திப்பதற்கான திகதி வழங்கப்பட்டதா?’ என கேள்வி எழுப்பினார்.

இதன்போது பதிலளித்த விக்னேஸ்வரன்,

எனக்கும் அழைப்பு கிடைத்தது எதிர்வரும் புதன்கிழமை ஜனாதிபதியை சந்திப்பதற்கான திகதி செயலக அதிகாரிகளினால் உறுதிப்படுத்தப்பட்டது.

என்னுடன் சந்திப்புக்கு சைக்கிள் கட்சியைச் சேர்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தையும் அழைப்பதாக தெரிவித்தனர்.

இதில் ஒரு குழப்ப நிலை இருக்கிறது குழந்தை பிள்ளைத்தனமான செயற்பாடுகளை உடைய கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் சேர்ந்து ஜனாதிபதியை சந்திப்பது சாதகமாக எனக்குத் தெரியவில்லை.

கஜேந்திரகுமார் எதற்கெடுத்தாலும் முடியாது, வரமாட்டோம், சரி வராது என பேசுபவர்களுடன் நானும் இணைந்து சந்திப்பது பரிசீலிக்க வேண்டிய விடயம்.

ஜனாதிபதியுடன் சந்திக்கும் போது நீண்ட காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் பேச இருக்கிறேன்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைத் தொடர்பில் ஏற்கனவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் பேசி இருக்கிற நிலையில் எதிர்வரும் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள சந்திப்பின்போது குறித்த விடயம் தொடர்பில் பேசிய சாதகமான முடிவு ஒன்றை எடுக்க முயற்சிப்பேன், என அவர் மேலும் தெரிவித்தார்.