வைத்தியர் வராததால் கர்ப்பவதிகள் அவதி

-யாழ் நிருபர்-

கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட உரும்பிராய் ஆரம்ப சுகாதார வைத்திய நிலையத்தில் வைத்தியர் வராததால் சிகிச்சைக்காக வருகை தந்த கர்ப்பவதிகள் பெரும் அசெளகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

இன்று புதன்கிழமை குறித்த ஆரம்ப சுகாதார வைத்திய நிலையத்தில் கர்ப்பவதிகளை பார்வையிடும் தினமாக ஒழுங்குபடுத்தப்பட்ட நிலையில் அங்கு 40க்கும் மேற்பட்ட கர்ப்பவதிகள் வந்திருந்தனர்.

ஆனால் அவர்கள் வெகு நேரமாக காத்திருந்த நிலையிலும் பார்வையிடுவதற்காக குறித்த ஆரம்ப வைத்தியசாலையில் வைத்தியர் வரவில்லை.

தற்போதைய பொருளாதாரம் நெருக்கடியில் கர்ப்பவாதிகள் முச்சக்கர வண்டிக்கு பணம் கொடுத்து குறித்த வைத்தியசாலைக்கு வருகை தந்தும் அங்கு வைத்தியர் இல்லாமை தமக்கு வருத்தம் அளிப்பதாக தெரிவித்தனர்.

குறித்த விடயம் தொடர்பில் வடமாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, குறித்த வைத்திய சாலையில் சுழற்சி முறையில் வைத்தியர் ஒருவர் பார்வையிடுவதாகவும் வைத்தியர் வராமை தொடர்பில் தான் ஆராய்வதாகவும் தெரிவித்தார்.