எரிபொருள் தட்டுப்பாட்டால் அவதியுறும் நோயாளர்களுக்கு வீடுகளுக்கு சென்று மருந்துகள் விநியோகம்

-திருகோணமலை நிருபர்-

எரிபொருள் இன்மையால் வைத்தியர்கள் தங்களது வைத்திய சேவையை தொலைபேசி ஊடாக  மேற்கொள்ளும் அவல நிலை உருவாகி உளளதாக திருகோணமலை மாவட்ட வைத்தியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அரச வாகனங்கள் மற்றும் தமது சொந்த வாகனங்களை கூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

கிராமப்புறங்களில் வாழ்ந்து வரும் மக்கள் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் தமது குடும்பத்தில் எவருக்காவது சுகயீனம் ஏற்பட்டால் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை தோன்றியுள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் திருகோணமலை மாவட்டத்தின் மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் வைத்தியர் லசித திலகரட்ன நோயாளர்களின் நலன் கருதி தமது சொந்த செலவில் வைத்திய சேவையை வழங்கி வருகின்றார்.

குறிப்பாக வைத்தியசாலையை அண்மித்த கிராமங்களில் வசித்து வரும் நோயாளர்களின் நலன் கருதி எரிபொருள் இல்லாமல் வைத்தியசாலைக்கு செல்ல முடியாத நிலையில் தவித்துக் கொண்டிருக்கும் நோயாளர்களுக்கு தொலைபேசி, whatsapp மற்றும் IMO போன்றவற்றின் ஊடாக நோயாளர்களை பார்வையிட்டு நோயாளர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து தமது சொந்த செலவில் வீடுகளுக்கு மருந்துகளை அனுப்பி வருவதாகவும் தெரிய வருகின்றது.

தமது கடமையை செய்து கொண்டு சமூக சேவைகளிலும் ஈடுபடுவது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.