சுவிஸ் – வலே மாநிலத்தில் வீசிய புயலில் 40 திற்கும் அதிகமானோர் காயம்

சுவிட்சர்லாந்தின் வலே மாநிலத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் வீசிய புயல் காற்றின் பாதிப்புகள் தொடர்பாக பொலிஸ் கட்டுப்பாட்டு மையத்திற்கு சுமார் 400 அழைப்புகள் வந்துள்ள நிலையில்,  40 திற்கும் அதிகமானவர்கள் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என வலே மாநில பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பலத்த காற்றின் தாக்கம் காரணமாக அதிகளவிலான விழுந்த மரங்கள் தொடர்பாக பதிவாகியுள்ளன, அவற்றில் சில வீதி போக்குவரத்தை சில மணித்தியாளங்கள் தடை செய்துள்ளன. மேலும் சில குடியிருப்பு பகுதிகளின் கூரைகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

இதேவேளை துர்த்மன் (Turtmann ) பகுதியில் இன்று இடம்பெற்ற பெரியளவிலான கால்பந்து போட்டி ரத்து செய்யப்பட்டது. இப்பகுதியில் காற்றினால் பறந்த பாகங்கள் காரணமாக இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும் பிரிகர்பாட்  (Brigerbad) பகுதியில் இடியுடன் கூடிய மழை மற்றும் காற்று வலுவாக வீசியதன் காரணமாக இப்பகுதியில் தற்காலிக கூடாரங்களில் வார இறுதி நாட்களை கழிக்க தங்கியிருந்த சுமார் 40 பேர் வரை சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கேரவன்கள் மற்றும் கார்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு பெண் முறிந்து விழுந்த மரக்கிளையால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புயல் 10 முதல் 15 நிமிடங்கள் வரை நீடித்தது , “இதுபோன்ற இடியுடன் கூடிய மழையை நான் இதற்கு முன்பு அனுபவித்ததில்லை” என்று பிரிகர்பாட் பகுதியில் பொழுதை குடும்பத்துடன் கழிக்க வந்திருந்த பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.