கொழும்பு நகரில் செப்டெம்பர் மாதத்திற்குள் உணவு இல்லாமல் போகும் ? : மாநகர முதல்வர் தெரிவிப்பு

112

கொழும்பு நகரில் இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்திற்குள் உணவு இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது என, கொழும்பு மாநகர சபையின் முதல்வர்; ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகர சபையினால் 600 ஏக்கர் நிலத்தில் அத்தியாவசிய உணவுப் பயிர்களை பயிரிடும் பணிகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக மாநகர முதல்வர் தெரிவித்துள்ள நிலையில், நகரவாசிகள் தங்கள் வீட்டுத் தோட்டங்களில் அத்தியாவசிய உணவுப் பயிர்களை பயிரிட ஊக்குவிக்கப்படுவார்கள் என திருமதி சேனாநாயக்க ஊடகவியலாளர் சந்திப்பின் போது இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

குறைந்த வருமானம் பெறும் கொழும்பு நகர சனத்தொகையில் சுமார் 60 வீதமானவர்கள் உணவுப் பற்றாக்குறையினால் பாதிக்கப்படுவார்கள். “நான் யாரையும் பயமுறுத்த விரும்பவில்லை, ஆனால் வரவிருக்கும் நெருக்கடிக்கு மக்களுக்கு தெரிவிக்கவும் தயார்படுத்தவும் மட்டுமே விரும்புகிறேன், ”என்று அவர் இந்த சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

நகரவாசிகளின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உலக உணவுத் திட்டம், உலகளாவிய உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு மற்றும் பிற நன்கொடை முகவர்களுடன் நாங்கள் தற்போது உரையாடலை மேற்கொண்டு வருகிறோம்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நகரில் நடைபெறும் உணவு விரயம் குறித்தும் மாநகரசபை கவனம் செலுத்தும் என்றும் , கொழும்பு நகரில் நாளாந்தம் 350 மெட்ரிக் தொன் உணவு வீணடிக்கப்படுகிறது. நகரின் உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்ய உதவும் வகையில் இதை குறைக்க விரும்புகிறோம்,” என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

மேலும், நகரத்தில் முச்சக்கரவண்டி சாரதிகள் உட்பட அன்றாட வருமானம் ஈட்டும் பலர் பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக முதல்வர் சுட்டிக்காட்டினார்.