“மங்கிபாக்ஸ்” பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு 21 நாள் சுயதனிமைப்படுத்தல்

132

-ச.சந்திரபிரகாஷ்-

“மங்கிபாக்ஸ்”  (monkeypox) வைரஸால்  பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு 21 நாள் சுயதனிமைப்படுத்தலை பெல்ஜியத்தின் இடர் மதிப்பீட்டுக் குழு அறிவித்துள்ளது . நாட்டில் மூன்று பேருக்கு வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து இதற்கான அறிவிப்பை சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ளது.

ஐரோப்பாவில் “மங்கிபாக்ஸ்”  வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு 21 நாள் சுயதனிமைப்படுத்தலை அறிவித்துள்ள முதல் நாடு பெல்ஜியமாகும்.

ஞாயிற்றுக்கிழமை மங்கிபாக்ஸினால் நான்காவது தொற்று கண்டறியப்பட்டது, ஏனைய மூன்று நபர்களைப் போலவே, நான்காவது நபரும் மே மாத தொடக்கத்தில் பெல்ஜியம்  ஆண்ட்வெர்ப் (Antwerp) பில்  நடைபெற்ற சர்வதேச ஓரினச் சேர்க்கையாளர் திருவிழாவில் , ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.

நோய்த்தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுபவர்களை சுயமாக தனிமைப்படுத்துமாறு பெல்ஜிய அரசாங்கம் எச்சரித்துள்ள நிலையில், ஆரம்ப நாட்களில் கோவிட்-19 பரவ தொடங்கிய காலத்துடன் இதை சில சுகாதார  நிபுணர்கள் மதிப்பீடு செய்கின்றனர்.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, குரங்கு பாக்ஸ் மக்களிடையே எளிதில் பரவாது என்றும் காயங்கள், உடல் திரவங்கள், சுவாச நீர்த்துளிகள் அல்லது படுக்கைகள் போன்ற பொருட்களுடன் நீண்டகால நெருங்கிய தொடர்பு தேவைப்படுகிறது எனத் தெரிவித்துள்ளது.

ஆரம்ப அறிகுறிகளில் காய்ச்சல், தலைவலி, வீங்கிய நிணநீர் முனைகள், முதுகு மற்றும் தசை வலி ஆகியவை அடங்கும்; இவற்றைத் தொடர்ந்து முகம், கைகள் மற்றும் உடலின் பிற இடங்களில் கொப்புளங்களுடன் ஒரு தனித்துவமான சொறியும் தோன்றும். நோய்த்தொற்று ஏற்பட்ட ஓரிரு வாரங்களில் அறிகுறிகள் தோன்றத் தொடங்கும்.

பெல்ஜியம், நெதர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி, போர்த்துக்கல், ஸ்பெயின், சுவீடன், கனடா, இஸ்ரேல், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் “மங்கிபாக்ஸ்”  கண்டறியப்பட்டுள்ளது.

“மங்கிபாக்ஸ்”  நோயானது குணப்படுத்த முடியாதது , ஆனால் பொதுவாக சில வாரங்களில் தானாகவே குணமாகிவிடும் என்றும், இது பொதுவாக மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் காணப்படுகிறது என சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.