விசாரணைகளில் இருந்து நாம் ஒதுங்கவில்லை: நாமல் தெரிவிப்பு

63

கோட்டகோகம மீதான தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளில் இருந்து தாங்கள் தப்பிசெல்லமாட்டோம் என தெரிவித்த முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, விசாரணைகளுக்கு பூரண ஆதரவை வழங்குவதாகவும் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பெயரிடப்பட்ட அனைவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கோரப்பட்டவாறு சரணடைந்துள்ளனர் அல்லது வாக்குமூலங்களை வழங்கியுள்ளனர் என அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

கொலை, ஆணவக் கொலைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கட்சி அரசியல் பாகுபாடின்றி சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும், அவ்வாறு செயற்படாவிட்டால் சட்டம் ஒழுங்கு மற்றும் சமூகம் சீர்குலைந்துவிடும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வன்முறைச் சம்பவங்களுக்குப் பின்னால் அரசியல் நோக்கத்துடன் வன்முறைச் செயல்களை வழிநடத்தும் ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் மற்றும் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞர்கள் என இரண்டு குழுக்கள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

“தாக்குதலை வழிநடத்தியவர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும், அதே நேரத்தில் தாக்குதலுக்கு உள்ளான இளைஞர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.