வடகொரியாவில் 187,000க்கும் மேற்பட்டோர் சுயதனிமையில்

வட கொரியாவில் கொரோனா தொற்றினால் குறைந்தது ஒருவர் உயிரிழந்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக அங்கு வைரஸ் தொற்றால் சிலர் பாதிக்கப்பட்டிருப்பதாய் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஏப்ரல் மாத இறுதியிலிருந்து சுமார் 187,000க்கும் மேற்பட்டோர் அங்கு தனிமைப்பட்டிருப்பதாக அந்நாட்டின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது.

அடையாளம் தெரியாத காய்ச்சலோடு இதுவரை 350,000க்கும் மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் 162,000க்கும் அதிகமானோருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் கொவிட்–19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களா என்பதை அது குறிப்பிடவில்லை.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 6 பேர் உயிரிழந்ததாகவும் அவர்களில் ஒருவர் ஒமிக்ரோன் கொரோனா திரிபினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வைரஸ் தொற்றுக்கு எதிரான நிலையத்தைப் பார்வையிடச் சென்ற வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன் தேசிய அளவிலான முடக்க நிலையை அறிவித்துள்ளார்.