அடுத்த மது விருந்து சர்ச்சை: மீண்டும் சிக்கினார் போரிஸ்

90

பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்குக்கு சில மணி நேரங்கள் முன்னதாக, பிரதமர் போரிஸ் ஜான்சனின் அலுவலக நிர்வாகிகள் மது விருந்து நடத்தியது குறித்த செய்தி அந்நாட்டு ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் 2020ல் கொரோனா முதல் அலையின் போது கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. வீட்டை விட்டு மக்கள் வெளியே வர கூட அனுமதிக்கப்படவில்லை. உடல் நலம் பாதிக்கப்பட்ட உறவினர்கள், நண்பர்களை சந்திப்பது, இறுதி சடங்குகளில் பங்கேற்பது உள்ளிட்டவை கூட முடியாத காரியமாக இருந்தது.

இதனால் மக்கள் கடும் மன உளைச்சலை எதிர்கொள்ள நேர்ந்தது.இந்நிலையில் 2020 மே மாதம், லண்டனின் 10, டவுனிங் தெருவில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் மிகப் பெரிய மது விருந்தை போரிஸ் ஜான்சன் நடத்தியதும் அதில் 100க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் பங்கேற்றதும் சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது.இது மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. போரிஸ் ஜான்சனின் பொறுப்பற்ற செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.

இதையடுத்து தன் தவறுக்கு போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கோரினார்.இந்த பிரச்னையே இன்னும் முடிவுக்கு வராத நிலையில் மற்றொரு சர்ச்சை தற்போது வெடித்துள்ளது.பிரிட்டன் ராணி எலிசபெத்தின் கணவர் பிலிப் வயோதிகம் காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரலில் காலமானார். அவரது இறுதி சடங்கு நடப்பதற்கு சில மணி நேரங்கள் முன்னதாக, போரிஸ் ஜான்சன் அலுவலக நிர்வாகிகள் மிகப் பெரிய மது விருந்து நடத்தி கும்மாளம் அடித்ததாக, பிரிட்டன் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. மது விருந்து நடத்தி சர்ச்சையில் சிக்கியுள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை, சொந்த கட்சியினரே பதவி விலகும்படி வலியுறுத்தி வருகின்றனர். அவர் பதவி விலகினால் அடுத்த பிரதமராக பொறுப்பேற்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதில் நிதி அமைச்சராக உள்ள ரிஷி சுனக்கின் பெயர் முதலில் அடிபடுகிறது. இந்திய வம்சாவளியான இவர், ஆக்ஸ்போர்டு மற்றும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகங்களில் படித்துப் பட்டம் பெற்றார். இவர், ‘இன்போசிஸ்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தியின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த 2015ல் எம்.பி.,யாக முதன்முறையாக பிரிட்டன் பார்லிமென்ட்டிற்கு தேர்வான இவர், 2020 பிப்ரவரியில் அந்த நாட்டின் நிதி அமைச்சரானார்.