கஜகஸ்தான் ஆர்ப்பாட்டம் : தொடரும் கைது நடவடிக்கை

91

கஜகஸ்தானில் இடம்பெற்று வரும் போராட்டம் தொடர்பாக மேலும் 1,678 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சோவியத் யூனியனிடமிருந்து கஜகஸ்தான் சுதந்திரம் பெற்றதிலிருந்து, அந்த நாடு இதுவரை கண்டிராத இந்தத் தீவிர போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை சுமார் 12 ஆயிரமாக அதிகரித்துள்ளது. மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில், வாகனங்களில் பயன்படுத்தப்படும் திரவ பெட்ரோலிய வாயுவின் (எல்.பி.ஜி) விலை திடீரென மிக அதிகமாக உயர்த்தப்பட்டது.

இதனை எதிர்த்து, கடந்த வாரம் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் 164 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது

‘கடந்த வாரம் நடைபெற்ற வன்முறைப் போராட்டங்களில் தொடர்புடையவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 1,678 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்’ என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்புப் படையினர் தரப்பில் 18 பேர் உயிரிழந்ததாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.