போர் முடிவுக்கு வந்தபின்னும் ஆப்கான் மக்களை தொடரும் அவலம்

66

ஆப்கானிஸ்தான்-லால்பூர் மாவட்டத்தில் வசிக்கும் சோள விற்பனையாளர் ஒருவர் தன்னிடம் இருந்த இருந்த பழைய மோட்டார் ஷெல் ஒன்றை தூசி தட்ட முயன்றபோது, குறித்த ஷெல் வெடித்ததில் ஒன்பது பாடசாலை மாணவர்கள் உயிரிழந்ததுடன் நால்வர் படுகாயமடைந்தனர்.

இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றதாக ஆப்கானிஸ்தானில் உள்ள அதிகாரிகள் தெரிவித்ததாக, மாகாண ஆளுநர் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது, என சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

‘சோளம் விற்பனையாளருக்கு அருகில் ஒரு பழைய மோட்டார் ஷெல் வெடித்ததில் ஒன்பது குழந்தைகள் வீரமரணம் அடைந்தனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர்’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் குறித்த சோளம் விற்பனையாளரைப் பற்றி எந்த தகவலும் இல்லை எனவும், அவரும் இறந்திருக்கலாம் எனவும் நம்பப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த நவம்பரில் ஆப்கானிஸ்தானின், வடகிழக்கு குண்டூஸ் மாகாணத்தில் ஒரு வீட்டிற்குள் வெடிகுண்டு எச்சம் வெடித்ததில் நான்கு பெண்கள் மற்றும் இரண்டு சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் மேலும் 3 குழந்தைகள் காயமடைந்தனர். வெடிக்காத நிலையில் கிடந்த வெடிகுண்டு ஒன்று அருகில் உள்ள வயல்வெளியில் கிடந்ததைக் கண்டு, அங்கு விளையாடிக்கொண்டிருந்த குழந்தை ஒன்று தெரியாமல் அதை வீட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

2005 முதல் இந்த மாத தொடக்கம் வரையான காலப்பகுதியில் ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற மோதலில் 28,500 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். இது உலகளவில் ஒப்பிடப்பட்ட அனைத்து குழந்தை இறப்புகளில் 27% ஆகும் என ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (UNICEF) தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை தலிபான் கைப்பற்றியதும், ஒரு வழியாக போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. ஆயினும் போர் காலங்களின் போது வெடிக்காத வெடிகுண்டுகள் மற்றும் கண்ணிவெடிகள் ஆப்கானிய குடிமக்களைக் கொல்வது, காயப்படுத்துவது மற்றும் ஊனப்படுத்துவது தொடர்கிறது என உள்நாட்டு அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

பல ஆண்டுகளாக போர், இயற்கை பேரழிவுகள் மற்றும் தீவிர வறுமை காரணமாக சுமார் 24 மில்லியன் ஆப்கானியர்கள் போதிய உணவின்மையால் வறுமையில் வாடுவதாகவும், 5 வயதுக்குட்பட்ட 3.2 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்வதாகவும், ஐக்கிய நாடுகள் அமையம் மற்றும் பிற உலகளாவிய உதவிக் குழுக்கள் தெரிவிக்கின்றன

சர்வதேச ஆய்வுகளின்படி ஆப்கானிஸ்தான் உலகிலேயே மிகவும் அதிகமாக கண்ணிவெடி மற்றும் வெடிக்காத வெடிகுண்டுகளால் தாக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக வரிசையில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.