வரலாற்று சாதனை படைத்த அறுவை சிகிச்சை : மனிதனுக்கு பன்றி இதயம்

139
மனிதருக்கு மாற்றப்பட்ட பன்றியின் இதயம் படங்கள் - Associated Press News

அமெரிக்காவில் உள்ள வைத்தியசாலையொன்றில் மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை, இதய மாற்று அறுவை சிகிச்சை மூலம் மனிதருக்கு மாற்றப்பட்டுள்ளது.

57 வயதான டேவிட் பென்னட் என்ற நபருக்கே இவ்வாறு இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள மேரி லேண்ட் மருத்துவமனையில், ஏழு மணி நேர அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட குறித்த நபர், மூன்று நாட்கள் கடந்த நிலையில் சிறந்த உடல் ஆரோக்கியத்துடன் உள்ளதாக நேற்று திங்கட்கிழமை வைத்தியர்கள் தெரிவித்தனர்.

டேவிட் பென்னட் இந்த இதய மாற்று அறுவைச் சிகிச்சைக்கு பின்னர் எவ்வளவு காலம் உயிர்வாழ்வார் என்பது குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. ஆயினும் அவரது உயிரைக் காப்பாற்றுவதற்கான கடைசி நம்பிக்கையாக  இந்த இதய மாற்று அறுவை சிகிச்சை இருந்தது என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த காலங்களில் இது போன்ற அறுவை சிகிச்சைகளுக்காக எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

பெரும்பாலும் நோயாளிகளின் உடல்கள் வேகமாக விலங்குகளின் உடற்பாகங்களை நிராகரித்து விட்டன.

1984 ஆம் ஆண்டில். இறக்கும் தருவாயில் இருந்த ஒரு குழந்தை (Baby Fae) இது போன்ற அறுவைச் சிகிச்சை மூலம், பபூன் விலங்கின் இதயம் பொருத்தப்பட்டு 21 நாட்கள் உயிர் வாழ்ந்ததமை குறிப்பிடத்தக்கது, என மருந்துவர்கள் தெரிவிக்கின்றனர்.