ரிஷாத் பதியுதீனின் மேன்முறையீட்டு மனு மீது பெப்ரவரி 03ல் விசாரணை

204

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவொன்றை விசாரணைக்காக எதிர்வரும் பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதி அழைக்குமாறு உயர்நீதிமன்றம் இன்று திகதி குறித்துள்ளது.

வில்பத்து பாதுகாப்பு வனப்பகுதிக்கு சொந்தமான கல்லாறு வனப்பகுதியின் ஒரு பகுதியை காடழிப்பு செய்து அனுமதியற்ற கட்டுமானங்களை மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்றினால் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக வௌியிடப்பட்டுள்ள உத்தரவினை வலுவிலக்கச் செய்யுமாறு கோரி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனு இன்று முர்து பெர்ணான்டோ மற்றும் எஸ் துரைராஜா ஆகிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் அழைக்கப்பட்டது.

வில்பத்து பாதுகாப்பு வனப்பகுதிக்கு சொந்தமான கல்லாறு வனப்பகுதியின் ஒரு பகுதியை காடழிப்பு செய்து அனுமதியற்ற கட்டுமானங்களை மேற்கொண்டதற்கு எதிராக சுற்றுச்சூழல் நீதி மையத்தினால் 2015 ஆம் ஆண்டு அப்போதைய அமைச்சராக இருந்த ரிஷாத் பதியுதீன் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதன்படி, குறித்த மனுவை விசாரித்த நீதிபதிகள் குழாம் காடழிப்பு செய்யப்பட்ட பகுதியில் ரிஷாத் பதியுதீனின் தனது சொந்த செலவில் மீள் மர நடுகை செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.