இஸ்ரேல் சிறையில் இருந்து தப்பிய பலஸ்தீன கைதிகளில் நால்வர் கைது

205

இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் உள்ள கில்போ சிறைச்சாலையிலிருந்து கடந்த திங்கட்கிழமை தப்பிய ஆறு பலஸ்தீனர்களில் நான்கு பேர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய காவல்துறை தெரிவித்துள்ளது.

அவர்களில் இருவர் வெள்ளிக்கிழமை அன்று நாசரேத் நகரின் அருகே பிடிக்கப்பட்டனர். மற்ற இருவர் சனிக்கிழமை அதிகாலை கார் நிறுத்தம் ஒன்றில் பதுங்கி இருந்த போது பிடிக்கப்பட்டனர்என்றும் இஸ்ரேல் காவல்துறை தெரிவித்துள்ளது.

மேற்குக் கரையில் உள்ள நகரான ஜெனின் எனும் நகரிலுள் அல்-அக்சா தியாகிகள் படையின் முன்னாள் தளபதி சக்காரியா ஜூபெய்தியும் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவராவார். மீதமுள்ள மூவர் ‘இஸ்லாமிய ஜிகாத்’ எனும் அமைப்பினர் ஆவர்.

கடந்த திங்களன்று இஸ்ரேலின் கில்போ சிறைச்சாலையில் இருந்து ஆறு பேர் தப்பிய பின் அவர்களுக்கான தேடுதல் வேட்டை தொடங்கியது.

இஸ்ரேலிய சிறை ஒன்றிலிருந்து பலஸ்தீன கைதிகள் இவ்வாறு தப்பிச் செல்வது கடந்த 20 ஆண்டுகளில் இதுதான் முதல் முறை. துருப்பிடித்த கரண்டி மூலம் பல மாதங்களாக தாங்கள் அடைத்து வைக்கப்பட்டு இருந்த சிலைக்கு கீழே சுரங்கம் ஒன்றைத் தோண்டி அவர்கள் தப்பியதாக நம்பப்படுகிறது.

தப்பிய சிறைக் கைதிகள் ஆறு பேரும் திங்களன்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:30 மணி அளவில் சிறையிலிருந்து தப்பிச் செல்வதை அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் காட்டுகின்றன. ஆனால் உள்ளூர்வாசிகள் தகவல் தெரிவித்த பின்னர் அதிகாலை 4:00 மணி அளவிலேயே அவர்கள் தப்பியது காவல்துறையினருக்கு தெரிய வந்தது. இஸ்ரேலிய காவல்துறையின் பல பாதுகாப்பு குறைபாடுகளை இதற்கு காரணம் என்று அந்நாட்டு ஊடகங்கள் கடுமையாக விமர்சித்தன.