இலங்கையில் உணவுத்தட்டுப்பாடு இல்லை – அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே

93

சர்வதேச செய்திகளில் இலங்கையில் உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், இலங்கையில் உணவுத்தட்டுப்பாடு கிடையாது. இங்கு உணவு மாபியாவே இடம்பெற்று வருகிறது என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றில் இடம்பெற்ற அவசரகால பிரகடனம் தொடர்பான விசேட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உணவு மாபியாவைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த அவசரகாலப் பிரகடனம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அரசாங்கம் எனும் ரீதியில் மக்களுக்கு தட்டுப்பாடு இன்றி உணவு வழங்க வேண்டியது எமது கடமையாகும். விவசாயத்துறை அமைச்சர் என்ற வகையில் நான் ஒன்றைக் கூற வேண்டும்.

கடந்த காலங்களில் இரண்டு போகத்தையும் சேர்த்து நாம் 8 இலட்சம் எக்டயாருக்கு நெற்பயிர்ச் செய்கை செய்துள்ளோம். 5.3 மில்லியன் மெட்ரிக் தொன் நெல்லை உற்பத்தி செய்துள்ளோம்.

இதனை 1.6 ஆல் பிரித்தால் 3.2 மில்லியன் மெட்ரிக் தொன் அரிசி எம்மிடம் தற்போது உள்ளது. இதனால், இலங்கையில் ஒருபோதும் உணவுத்தட்டுப்பாடு ஏற்படவில்லை என்பதை நான் இங்கு உறுதியாகக் கூறிக்கொள்கிறேன்.

இந்நிலையில், அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தி இராணுவ ஆட்சிக்கு ஜனாதிபதி வழிவகுப்பதாக எதிர்க்கட்சியினர் கூறிவருகிறார்கள்.

ஆனால், கடந்த காலங்களில் எதிர்க்கட்சியினரால் மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு போராட்டத்தையும் தண்ணீர் தாரை பிரயோகத்தை மேற்கொண்டோ, தடியடி நடத்தியோ ஜனாதிபதி கட்டுப்படுத்தவில்லை. போராடிய எவரையும் கைது செய்யவில்லை. அவசரகால சட்டத்தை அன்றே கொண்டுவந்து ஜனாதிபதியால் போராட்டங்களை கட்டுப்படுத்திருக்க முடியும்.

ஆனால், அவர் அன்று அவ்வாறு செய்யவில்லை என்பதை எதிர்க்கட்சியினர் புரிந்துக் கொள்ள வேண்டும். அத்தோடு, இந்த அவசரகால சட்டமானது மக்களுக்காக கொண்டுவரப்பட்டது என்பதையும் இவர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.” என கூறினார்.