இரு கைகளையும் இழந்த ஜெங் டோக்யோ நீச்சல் போட்டிகளில் 4 தங்கப் பதக்கங்கள்

568

டோக்யோ 2020 பாராலிம்பிக் நீச்சல் போட்டிகளில் இரு கைகளையும் இழந்த சீனா வீரர் ஜெங் தாவோ 4 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

குழந்தையாக இருக்கும்போதே தனது இரு கைகளையும் இழந்த 30 வயது நிரம்பிய ஜெங், டோக்யோ பாராலிம்பிக் போட்டியில் ஃப்ரீஸ்டைல், பேக்ஸ்ட்ரோக், பட்டர்ஃபிளை நீச்சல் பிரிவுகளில் ஆதிக்கம் செலுத்தி பதங்கங்கள் வென்றுள்ளார்.

கடந்த புதன்கிழமை நடந்த 50 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் நீச்சல் இறுதிப் போட்டியில் இந்த  பாராலிம்பிக் சாதனை ஜெங் தாவோக்கு கிடைத்துள்ளது. பாராலிம்பிக் போட்டிகளில் சீனா வென்ற 500 வது தங்கப் பதக்கம் இதுவாகும்.

இந்தப் போட்டியில் தங்கம் வென்ற பின்னர் செய்தியாளர்களிடம் உரையாடிய ஜெங்,

“டோக்யோ 2020 பாராலிம்பிக் போட்டிதான் என் கடைசி பாராலிம்பிக் போட்டியாக இருக்கும் என்பதால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் முழு முயற்சியையும் மேற்கொண்டேன். இதுதான் இதுவரை நான் பங்கேற்ற பாராலிம்பிக் போட்டிகளிலேயே எனக்கு மிகவும் சிறப்பாக அமைந்தது,” என தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக 50 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் நீச்சல் போட்டியில் ஓர் உலக சாதனை படைத்தார் ஜெங். அந்த தூரத்தை அவர் 31.42 விநாடிகளில் நீந்திக் கடந்திருந்தார்.

டோக்யோ பாராலிம்பிக் போட்டிக்கான பயிற்சியில் ஜெங் ஒவ்வொரு நாளும் 10 கி.மீ. தூரம் நீந்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

13 வயதில் விளையாட்டுப் போட்டிக்கு வந்த ஜெங் தனது 19 வயதில் முதல் முதலாக சர்வதேச நீச்சல் போட்டியான நெதர்லாந்தில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றிருந்தார். முதல் பாராலிம்பிக் தங்கப் பதக்கம் 2012ம் ஆண்டு லண்டனில் நடந்த போட்டியில் 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் பிரிவில் தங்க பதக்கம் வென்றுள்ளார்.

இதுவரை 9 பாராலிம்பிக் பதக்கங்களை ஜெங் தாவோ வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.