பல கோடி மதிப்புள்ள சொத்துக்களுடன் ஹெலிகாப்டரில் தப்பித்த அஷ்ரப் கானி – ரஷ்ய தூதரகம் வெளியிட்டுள்ள பரபரப்பு தகவல்

369

-ச.சந்திரபிரகாஷ்-

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய அந்நாட்டு முன்னாள் அதிபர் அஷ்ரப் கானி ஒரு ஹெலிகாப்டரில் பல கோடி மதிப்புள்ள பணம், தங்க ஆபரணங்களோடு தப்பித்துள்ளதாக இன்று திங்கட்கிழமை காபூலில் உள்ள ரஷ்ய தூதரகம் வெளியிட்டுள்ள பரபரப்பு தகவல் ஒன்றில் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் இன்னும் சில நாட்களில் தாலிபான் சார்பாக ஆப்கான் நாட்டிற்கான அதிபர் அறிவிக்கப்படவுள்ளார். தலிபான்களின் வெற்றிக்கு பின் ஆப்கான் நாட்டின் பெயர் “இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆப் ஆப்கானிஸ்தான்” என்ற புதிய பெயரை தாலிபான்கள் வைத்துள்ளனர்.

தாலிபான்கள் ஆப்கானிஸ்த்தானை முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் வீழ்ச்சி அடைய 90 நாட்கள் ஆகும் என்று அமெரிக்க உளவுத்துறை 3 நாட்களுக்கு முன்புதான் தெரிவித்திருந்த நிலையில்  அறிவிக்கப்பட்டு 48 மணி நேரத்தில் தாலிபான்கள் முழு ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றி உள்ளனர்.

ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி கடைசி நொடி வரை தாலிபான்களுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தார். அமெரிக்க படைகள் வெளியேறிய பின்பும் கூட அவர் ஆப்கான் படைகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வந்தார்.

“கடைசி நாள் வரை தாலிபான்களை நாங்கள் எதிர்ப்போம்” , “நான் பதவி விலக மாட்டேன்” என்று அஷ்ரப் கானி அறிவித்து வந்தார். ஆனால் நேற்று ஞாயிற்றுக்கிழமை போரின் எல்லாம் மாறியுள்ளது. நேற்று காலை ஜலாலாபாத் பகுதியை தாலிபான் கைப்பற்றியதும் அஷ்ரப் கானி அமைதியானார்.

காபூல் மட்டுமே மீதம் இருந்ததால் அவர் எதுவும் பேசாமல் மௌனம் காத்து வந்தநிலையில் கடைசியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அளவில் காபூலுக்குள் தாலிபான்கள் நுழைந்தனர்.

இதையடுத்து சில நிமிடங்களில் ஆட்சி மாற்றம் குறித்து காபூல் ஜனாதிபதி மாளிகையில் தாலிபான்களுக்கும் அஷ்ரப் கானிக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்ததுள்ளது இனி கண்டிப்பாக தாலிபானை வீழ்த்த முடியாது என்பதை அஷ்ரப் கானி உணர்ந்து கொண்டார்.

தாலிபான்களும் இவரை கைது செய்தாலோ ஆயுதங்களை காட்டி மிரட்டி பணிய வைத்தாலோ சர்வதேச அளவில் பிரச்சனை வரும் என்பதால் பேச்சுவார்த்தையில் அமைதியாக இறுதிவரை ஈடுபட்டனர்.

இந்தநிலையில் பாதுகாப்பாக நீங்கள் வெளியேறும் வாய்ப்பை கொடுக்கிறோம். அமைதியாக எங்களை எதிர்க்காமல் பதவி விலகுங்கள் என்று தாலிபான்கள் அஷ்ரப் கானியிடம் தெரிவித்ததையடுத்து ராஜினாமா செய்தார்.

இரவோடு இரவாக காபூலில் இருந்து தஜிகிஸ்தானுக்கு விமானம் மூலம் தப்பி சென்றார். தாலிபானியர்களின் உதவியோடுதான் இவர் நாட்டை விட்டு வெளியோறியுள்ளதாக தெரியவருகின்றது.

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இவரின் திடீர் வெளியேற்றம் பெரிய அளவிலான அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த நிலையில்தான் அஷ்ரப் கானி நான்கு கார் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் முழுக்க பணத்தோடு தப்பி சென்றதாக ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.

காபூலில் இருக்கும் ரஷ்ய தூதரகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. தன்னிடம் இருந்த பல கோடி மதிப்புள்ள பணம், நகை, வைரங்களை இவர் ஹெலிகாப்டரில் வைத்து எடுத்து சென்றுள்ளார் எனவும் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் இவர் தஜிகிஸ்தான் சென்றதாக செய்திகள் வெளியானாலும் அவரின் உண்மையான இருப்பிடம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இவர் அமெரிக்காவிற்கு சென்று இருக்கலாம் என்றும் தகவல்கள் வருகின்றன. இவர் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய விதம் வியப்பூட்டும் வகையில் இருந்ததாகவும், அவர் மூட்டை மூட்டையாக பணங்களை அடுக்கியதை நேரில் பார்த்த சாட்சியங்கள் இருப்பதாகவும் ரஷ்சிய தூதரகம் தெரிவித்துள்ளது.

அதிபராக இருந்து கொண்டு கடைசி நொடியில் தாலிபானை எதிர்க்காமல் அடிபணிந்தது மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் தாலிபான் படைகளை எதிர்க்காமல் ஆப்கானிஸ்தான் இராணுவம் சரண் அடைந்ததையும் அந்நாட்டு மக்கள் விரும்பவில்லை. இவருடைய நடவடிக்கையினால் மக்கள் பெரும் கொந்தளிப்பில் உள்ளனர் என பல சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.