விசாரணைகள் திசைத்திருப்பப்படுவதாக ஹிசாலினியின் தாயார் குற்றச்சாட்டு

352

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றி வந்த நிலையில் உயிரிழந்த டயகம பிரதேசத்தைச் சேர்ந்த ஹிசாலினி என்ற 16 வயது சிறுமி தொடர்பான விசாரணைகள் திசைத்திருப்பப்படுவதாக ஹிசாலினியின் தாயார் குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைக் தெரிவித்துள்ளார். தமது பிள்ளையை தொழிலுக்காகவே அங்கு அனுப்பி வைத்தோம். ஆனால் அவரது உடல் சவப்பெட்டியிலேயே எமக்கு கிடைத்தது.

பிள்ளைக்கு என்ன ஆனது என்பது தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்த வேண்டும் ஆனால் அவ்வாறு இல்லாமல் இங்கு வந்து அவர்கள் எழுப்புகின்ற கேள்விகள் எம்மால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

பிள்ளைக்கு இங்கு வைத்து என்ன ஆனது, பிள்ளை இங்கு யாருடனும் தொடர்பில் இருந்தாரா? போன்ற கேள்விகளை அவர்கள் எழுப்புகிறார்கள்.

நாட்டின் முக்கிய இடத்தில் இருக்கின்றவர்களே இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றார்கள் என்றால் நாட்டில் இவ்வாறு எத்தனை சம்பவங்கள் வெளியில் தெரியாமல் இடம்பெறுகின்றன? எமது பிள்ளைக்கு நியாயம் கிடைக்கும் வரையில் ஒரு சொட்டு கண்ணீர் கூட சிந்தமாட்டேன் எனவும் எமது பிள்ளையின் உடல் மீது சபதம் எடுத்திருக்கிறேன் எனவும் ஹிசாலியின் தாயார் தெரிவித்துள்ளார்.