மட்டக்களப்பில் உயிரிழந்த இளைஞன் உடலை மீள் பிரேத பரிசோதனைக்கு நீதிமன்றம் உத்தரவு –

546

மட்டு இருதயபுரம் கிழக்கு பகுதியில் கடந்த 03ஆம் திகதி இரவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் திடீரென உயிரிழந்த சந்திரன் விதுஷன் எனும் இளைஞனின் சடலத்தினை தோண்டியெடுத்து இலங்கையிலேயே சிறந்த நிபுணத்துவம் வாய்ந்த பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் முன்னிலையில் மீள் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் நடைபெற்றபோது இந்த உத்தரவு வழங்கப்பட்டதாக சிரேஷ்ட சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 03ஆம் திகதி இரவு இருதயபுரம் கிழக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்த  சந்திரன் விதுசன் என்னும் இளைஞன் போதைப்பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தார்.

கைதுசெய்யப்பட்டு மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இளைஞன் மறுதினம் சுகவீனமுற்ற நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இதனை தொடர்ந்து குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் உறவினர்களினால் சந்தேகம் வெளியிடப்பட்டிருந்த நிலையில் குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.

இதன்போது, 4 பக்கட் ஐஸ் போதைப்பொருளை வாயில் போட்டு விழுங்கியதால் அது நெஞ்சுப் பகுதியில் வெடித்ததில் நுரையீரல் பாதிக்கப்பட்டு இளைஞன் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் தனது மகன் வீட்டில் வைத்து கைதுசெய்யப்பட்டதுடன் அவரது கைகள் பின்புறமாக விலங்கிடப்பட்ட நிலையில் அவர் போதைப்பொருளை விழுங்குவதற்கு சந்தர்ப்பம் இல்லையெனவும் பொலிஸாரின் தாக்குதலில்தான் தமது மகன் உயிரிழந்துள்ளதாகவும் பெற்றோர் தெரிவித்துவந்தனர்.

இது தொடர்பில் உண்மை நிலை கண்டறியப்படவேண்டும் என்று கோரி கடந்த 10ஆம் திகதி பெற்றோரினால் நீதிமன்றில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கு இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது உயிரிழந்த இளைஞனின் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஸ் ஆஜராகியிருந்ததுடன் எதிர்வரும் திங்கட்கிழமை குறித்த இளைஞனின் சடலத்தினை நீதிபதி முன்னிலையில் தோண்டியெடுத்து பேராதனை பல்கலைக்கழகத்திற்கு இரண்டாவது பிரேத பரிசோதனைக்கு அனுப்புவதற்குமான உத்தரவு வழங்கப்பட்டதாக சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்தார்.