4 வயது குழந்தைக்கு மது அருந்தக் கொடுத்த நபருக்கு நீதிமன்றம் ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணை !

154

குழந்தைக்கு மதுபானம் அருந்தக் கொடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞனை ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பேலியகொடை பொலிஸினால் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞன் கொழும்பு பிரான நீதவான் புத்திக சி ராகல முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

குறித்த சந்தேகநபர் 4 வயது குழந்தைக்கு மதுபானத்தை அருந்தக் கொடுத்து அதனை காணொளி பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்த பொலிஸார், குழந்தையை கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதித்து குழந்தையின் மனநிலை குறித்து அறிக்கை ஒன்றை பெற்றுக் கொள்ள எதிர்ப்பார்த்துள்ளதாக நீதிமன்றில் தெரிவித்தனர்.

குறித்த அறிக்கை கிடைத்த பின்னர் குழந்தை ஏதாவது விதத்தில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகி உள்ளதா என்பது தொடர்பில் அறிந்துக் கொள்ள கூடியதாக இருக்கும் என பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

முறைப்பாடை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி அழைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.