அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தை மீண்டும் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை

54

நல்லாட்சி அரசாங்கத்தின் திறனற்ற முகாமைத்துவம் மற்றும் நிதி முறைகேடு காரணமாக இழப்புகளை எதிர்கொண்டுள்ள அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தை மீண்டும் செயற்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இலங்கை அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தற்போதைய நிலை குறித்து அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனம் மூலம் பல திட்டங்கள் தன்னிச்சையாக செயல்படுத்தப்பட்டுள்ளன என்பதும், அதன் மூலம் கிடைக்க வேண்டிய பில்லியன் கணக்கான ரூபாய் பணம் இதுவரை பொறியியல் கூட்டுத்தாபனத்தினால் இன்னும் அறவிடப்படவில்லை என்பதும் தெரியவந்தது.

சிறிகொத கட்சி தலைமையகத்தை நிர்மாணிப்பதற்காக அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தின் சேவைகள் பெறப்பட்டுள்ளன என்றும், அதற்கு இதுவரை எந்த கட்டணமும் செலுத்தப்படவில்லை என்றும் பொறியியல் கூட்டுத்தாபனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கம் தகுதிகள் இல்லாமல் நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகளை வழங்கியமையால் அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

குறித்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் காமினி லொகுகே, இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், பிரதமரின் மேலதிக செயலாளர் சமிந்த குலரத்ன, கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட் கைத்தொழில் இராஜாங்க அமைச்சின் செயலாளர் கீர்த்தி ரஞ்சித் அபேசிறிவர்தன, இலங்கை பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சட்டத்தரணி ரத்னசிறி களுபஹன உள்ளிட்ட அரச நிறுவனத் தலைவர்கள் மற்றும் பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.