முதுகெலும்பு சேதமடைந்த கொரோனா நோயாளிக்கு வெற்றிகரமான சத்திர சிகிச்சை

164

-கண்டி நிருபர்-

பலா மரத்திலிருந்து விழுந்தது முதுகெலும்பு பலத்த சேதம் ஏற்பட்டிருந்த 60 வயது உடைய கொரோனா நோயாளரின் உடம்பில் ஆக்சிஜன் குறைந்து ஆபத்தான நிலையில் கோமா நிலைக்கு செல்வதற்கு முன் கண்டி தேசிய வைத்தியசாலையில் எலும்பியல் அறுவை சிகிச்சை விசேட வைத்திய நிபுணர் சுனந்த உடகெதர மற்றும் அவருடைய குழு சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது.

சுமார் மூன்று மணி நேரம் நீடித்த இந்த சத்திர சிகிச்சையில் விசேட வைத்தியர் இருவர் உட்பட 6 பேர் கொண்ட குழு ஈடுபட்டிருந்தனர்.

ஏணியில் ஏறி பலாக்காய் பறிக்கும்போது காய் தலையில் விழுந்த நிலையில் தடுமாறி கீழே விழுந்த 60 வயதுடைய குறித்த நபருக்கு முதுகெலும்பு பலத்த சேதம் ஏற்பட்டு கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

குறித்த நபர் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்படும் போது முதுகெலும்பில் பலத்த சேதம் ஏற்பட்டு இருந்ததாகவும் இந்த நிலையில் கட்டாயம் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அறுவை சிகிச்சை நிபுணர் சுனந்த உடகெதர தெரிவித்தார்.

கொரோனா தொற்று காலம் என்பதால் அறுவை சிகிச்சைக்கு முன்னர் ஆன்டிஜன் மற்றும் பீ.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும்

சாதாரண நோயாளிக்கு முதுகெலும்பு சத்திர சிகிச்சை மேற்கொள்வது விசேட காரணியாக இல்லாவிட்டாலும் இந்த நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உடம்பில் ஆக்சிஜன் அளவு 80 சதவீதத்திற்கு குறைந்திருந்த வேளையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது விசேட காரணியாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 8ஆம் திகதி சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட இந்த நபர் தற்போது அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தற்போது அவர் உடல்நிலை சாதாரணமான நிலைக்கு தேறி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.