ஐந்து வயது பிள்ளைக்கு ஆபத்தான நிலை – ஆடம்பர காரில் போதைப்பொருள் வியாபார தம்பதியினர் கைது

440

-கண்டி நிருபர்-

தங்களது ஐந்து வயது பிள்ளையை ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகக் தெரிவித்து ஆடம்பர கார் ஒன்றில் கண்டி மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டிருந்த தம்பதியினரை கண்டி பொலிஸ் குற்றப் புலனாய்வு அதிகாரிகளால் 22 லட்சம் பணம் உட்பட 60 கிராம் போதை பொருளுடன் இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் கண்டி லுவி பீரிஸ் மாவத்தையில் வைத்து கைது செய்துள்ளனர்.

போக்குவரத்து கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், தம்பதியினர் ஐந்து வயது பிள்ளையை ஒரு துணியில் போர்த்தி ஒவ்வொரு இடத்திற்க்கும் சென்று போலீஸை தவறாக வழிநடத்தி, மோசடி செய்துள்ளனர்.

வாகனத்தில் இருந்தபோது போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட பிள்ளை 40 வயதுடைய பெண்ணின் முதல் திருமணத்தின் பிள்ளை என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சந்தேகநபரான, 40 வயதான பெண் தன்னுடைய கள்ளக்காதலுடன் சுற்றுலா விடுதியில் தங்கியிருந்தே இந்த மோசடியில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவர்கள் இருவரும் கண்டியில் உள்ள முன்னணி பாடசாலையில் கல்வி கற்றுள்ளனர் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட ஹெரோயின் மதிப்பு சுமார் 6 மில்லியன் ரூபாய் என்று கண்டி பொலிஸ் தலைமையக அதிகாரி சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டி பிரிவின் சிரேஸ்ட பொலீஸ் அதிகாரிகளான சமில் ரத்நாயக்க மற்றும் பலியவடன , கண்டி பொலிஸ் அதிகாரி துசித ஹலங்கொட அறிவுறுத்தலின்படி குற்ற தடுப்பு பிரிவின் தலைமை ஆய்வாளர் சமரநாயக்க மற்றும் உதவி தலைமை அதிகாரி செமசிங்ஹவினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.