மட்டு – மணிக்கூட்டு கோபுரத்தின் கடிகாரம் 10 லட்சம் ரூபாவுக்கு கொள்வனவு செய்து 10 நாட்களில் பழுதடைந்துள்ளது

538

-க. சரவணன்-

மட்டக்களப்பு மணிக்கூட்டு கோபுரத்தின் கடிகாரம் 10 இலச்சம் ரூபாவுக்கு கொள்வனவு செய்தமை, அரச நிதியில் தந்தை செல்வாக்கு பூங்கா அமைத்துள்ளமை, வாகனம் திருத்தலுக்கு 22 இலச்சம் ரூபா வழங்கியமை போன்ற பல்வேறு மாநகரசபை நிதியினை மாநகரசபை முதல்வர் முறை கேடான முறையில் மோசடி செய்துள்ளார்.

எனவே இது தொடர்பாக அரசாங்கம் விசாரணை செய்ய வேண்டும் என மாநகரசபையின் சுயேச்சைக்குழு உறுப்பினர் சூசைமுத்து கிளனி வசந்தகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு கிழக்கு ஊடக ஒன்றியத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு கோரிக்கைவிடுத்துள்ளார்.

இந்த மாநகரசபையில் நடக்கின்ற பல முறை கேடான முறையில் பணம் செலவிடப்படுகின்றது.

குறிப்பாக மாநகரசபை மக்களிடம் பெற்ற வரிப்பணம் முறையாக மக்களுக்கு பயன்படுத்தப்பட்டதா என்ற கேள்வி எழுகின்றது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு நகரின் மத்தியில் காந்திபூங்காவிற்கு முன்னாள் அமைந்துள்ள மணிக்கூட்டு கோபுரத்தின் கடிகாரம் 10 இலச்சம் ரூபா செலவில் கொள்வனவு செய்யப்பட்டு பொருத்தப்பட்டது இது 10 நாட்களின் பின்னர் பழுதடைந்து செயழிழந்துள்ளது.

அதேபோன்று முதல்வருக்கான வாகனத்தை 2 கோடி ரூபா செலவில் கொள்வனவு செய்த மாநகர முதல்வர் அந்த வாகனத்தை திருத்துவதற்கு மாநகரசபை நிதியில் இருந்து 22 இலச்சம் ரூபாவை அந்த நிறுவனத்துக்கு வழங்கியிருக்கின்றார்.

அதேவேளை கொள்வனவு செய்த கொங்கிறீற் கலவைக்கு 28 இலச்சம் ரூபா பெறுமதிசேர்வரி (வற்வரி) செலுத்தப்பட்டுள்ளதுடன் அரச நிதியில் தந்தை செல்வாக்கு ஒரு பூங்காவை அமைத்து நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடாத்தவேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றேன்.

மழைகாலத்தில் மக்கள் மிகவும் ஒரு வேதனையான வாழ்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். உரிய வடிகான்கள் அமைக்கப்படவில்லை ஒரு ஒருங்கிணைப்பு செய்யப்பட்ட அபிவிருத்தி செய்யப்படவில்லை, மத்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட கம்பரலிய, சப்புறகமுக திட்டங்களை முதல்வர் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி மாநகரசபை ஊடாக அந்த வேலைத்திட்டம் நடைபெறவேண்டும் என வலியிறுத்தி அந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்தபோதும் அதனால் மக்கள் பிரயோசனமடையவில்லை.

ஒருங்கிணைப்பு இல்லை இது தொடர்பாக கடந்த 7 நாட்களுக்கு முன்னர் கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்து இது தொடர்பாக தெரிவித்தோம். அவர் அப்போது இதை எழுத்துமூலம் வழங்குமாறும் விசாரணைக்குழு மூலம் ஆராய்வதாக தெரிவித்தார்.

இந்த வருட பாதீடு தொடர்பாக இரு ஆளும் கட்சிகளில் ஒன்றான சிறிலங்கா சுதந்திர கட்சி ஆதரவுடன் தான் அந்த பாதீடு நிறைவேற்றப்பட்டது.ஆட்சி நடக்கின்றது. இவர்கள் தெரிவிப்பது போல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆட்சி அங்கு இல்லை. ஆனால் தேசியம் பேசிக் கொண்டு அரசாங்கத்துடன் எதிர்த்துக் கொண்டு உள்ளக ரீதியாக அரசாங்கத்துடன் இணைந்து இந்த மாநகரசபை இயக்கி வருகின்றார்.

குறிப்பாக நாவற்குடா சத்துருக்கொண்டான் பிரதேசங்களில் மழை வெள்ளம் மாதக்கணக்கில் வழிந்தோட முடியாமல் தேங்கி நிற்கின்றது மக்கள் அவதியுறுகின்றனர். இது அரச நிதியோடு செயற்படும் போது முதல்வர் இதனை தடுக்கின்றனர். காரணம் தங்களுக்கு அபிவிருத்தி தேவையில்லை உரிமை மட்டும்தான் தேவை என கூறிக் கொள்ளும் முதல்வர் உள்ளகமாக இந்த அரச ஆதரவுடன் மாநகரசபையை இயக்கி கொண்டிருக்கின்றார் என்றார்.

இதேவேளை இது தொடர்பாக மாநகரசபை முதல்வர் ரி. சரவணபவனை தொடர்பு கொண்டு மாநகரசபை உறுப்பினர் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பாக கேட்டபோது அவர் கடிகாரம் உரியமுறையில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. வாகனம் பழுதடைந்தால் திருத்துவதற்கு உரிய அதிகரிகளின் அனுமதியுடன் நிதி பிரமானங்கள் பின்பற்றி செலவு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறே முறையாக வற்வரியும் உரிய நிர்வாக முறையில் செய்யப்பட்டுள்ளது. அவர் என்ன எதிர்பார்புடன் வந்தாரோ தெரியவில்லை அவர் அது நிறைவேறாத இடத்தில் இப்படியான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அதேவேளை அவருக்கு எதிராக ஒழுக்ககாற்று நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் ஒவ்வொரு மாதமும் நிதி அறிக்கை மாநகரசபை அமர்வில் சமர்ப்பிக்கட்டு வருகின்றது. எனவே அரசியல் காட்புணர்சியினால் இவ்வாறு குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றார் என அவர் தெரிவித்தார்.