சுவிட்சர்லாந்தில் புதிய வைரஸ் பரவல்! ஆறு வாரங்கள் வர்த்தக நிலையங்கள் மூடப்படுகின்றன

164

-ச.சந்திரபிரகாஷ்-

சுவிட்சர்லாந்தில் வேகமாக பரவி வரும் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவின் புதிய கொரோனா வைரஸ் திரிவின் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஆறு வாரங்களுக்கு அத்தியாவசியமற்ற அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுவதற்கு சுவிஸ் கூட்டாச்சி அரசு இன்று புதன்கிழமை முடிவு செய்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை 18 ஆம் திகதி முதல் பிப்ரவரி இறுதி வரை சுவிட்சர்லாந்தில் உள்ள அனைத்து அத்தியவசியமற்ற வர்த்தக நிலையங்களும் மூடப்படவுள்ளது.

அலுவலகத்தில் ஊழியர்கள் மத்தியில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக வீட்டிலிருந்து வேலை செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதோடு ,சிறுவர்கள் உட்பட ஐந்து பேர் தனியார் நிகழ்வுகளில் கூடுவதற்கான கட்டுப்பாடு என்பன திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரவுள்ளன.

கடந்த வாரம் அறிவிக்கப்பட்டதற்கு இணங்க உணவகங்கள், கலாச்சார நிறுவனங்கள், விளையாட்டு மற்றும் ஓய்வு இடங்கள் பிப்ரவரி இறுதி வரை மூடப்படும்.

இருப்பினும் கட்டாய பாடசாலைகள் திறந்து இருக்கும் பாடசாலைகள் மற்றும் பனிச்சறுக்கள் விளையாட்டு பகுதிகளை திறத்தல் மற்றும் மூடுவது குறித்து மாநிலங்கள் முடிவு செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திறப்பதற்காக அனுமதிக்கப்பட்டுள்ள அத்தியாவசிய வர்த்தக நிலையங்கள், எரிபொருள் நிலையங்கள் மற்றும் சிறிய வர்த்தக நிலையங்கள்(  kiosks)  இரவு 7 மணியுடன் மூடப்பட வேண்டும்.

தபால், வங்கி, சிகையலங்கார நிலையம் போன்றவை சுகாதார விதிமுறைகளை பின்பற்றி திறந்திருக்கும்.

மேலும் புதிய வைரஸ் மாறுபாடு கவலையை ஏற்படுத்துவதாகவும் இவற்றின் பரவலை உடனடியாக கட்டுப்படுத்தாவிட்டால் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிவரும் எனவும், ஆரம்ப மதிப்பீடுகளின்படி புதிய தொற்றுநோய்க்கான ஆபத்து 50 முதல் 70 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.