ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அஜித் மானப்பெருமவிற்கு வழங்க நடடிக்கை

30

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பதிலாக அஜித் மானப்பெரும நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து நேற்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த நிலையில், அவருக்கு பதிலாக நாடாளுமன்ற உறுப்பினராகும் வாய்ப்பு விருப்பு வாக்கு பட்டியலில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அடுத்த இடத்தில் உள்ள அஜித் மானப்பெருமவுக்கு கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஞ்சன் ராமநாயக்க, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு காரணமாக சிறைத்தண்டனைப் பெற்று அவரது நாடாளுமன்ற உறுப்புரிமையை இழக்க நேரிடுவதால், அஜித் மானப்பெரும பதிலீடு செய்யப்படுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலர் ரஞ்சித் மத்தும பண்டார கூறியுள்ளார்.

அஜித் மானப்பெருமவை பதிலீடு செய்ய தமது கட்சி எந்த கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை எனவும், 1981 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் தானியக்க முறையில், அது குறித்த செயற்பாடுகள் இடம்பெறும் எனவும் ரஞ்சித் மத்தும பண்டார கூறினார்.

கடந்த 2020 ஒகஸ்ட் பொதுத் தேர்தலின் போது கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட அஜித் மான்னப்பெரும 47,212 வாக்குகளைப் பெர்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பட்டியலில் அவரே அடுத்த இடத்தில் உள்ள நிலையில், தெரிவு செய்யப்பட்ட ஒரு வேட்பாளர் பதவியை இழக்கும் போது தேர்தல்கள் ஆணைக்குழு அடுத்த சில நாட்களில் பட்டியலில் அடுத்த இடத்தில் இருப்பவரை பெயரிட்டு வர்த்தமானி வெளியிடுவது வழமையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.