கடல் அலை 3 மீற்றர் வரை மேல் எழும்பும் மீனவர்கள் கரையொதுங்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

275

மத்திய வடகிழக்கு மற்றும் கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிரதேசங்களில் கடும் காற்று வீசக்கூடிய சூழ்நிலை காணப்படுவதாலும் கடல் அலை 3 மீற்றர் வரை மேல் எழும்பக் கூடிய சாத்தியங்கள் உள்ளதால் மீனவர்கள் இது தொடர்பில் மிகவும் அவதானமாகவும் , எச்சரிக்கையாகவும் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாளை சனிக்கிழமை 19 ஆம் திகதி தொடக்கம் 22 ஆம் திகதி வரை வங்காள விரிகுடாவல் குறைந்த தாழமுக்க நிலை வலுவடைந்து வருவதனால் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் கடல் பகுதியை விட்டு வெளியேறுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பால் கடற்பரப்புகளிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் உள்ளது.

நீர்கொழும்பிலிருந்து மாத்தறை ஊடாக தென்பகுதி வரையிலான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 50 முதல் 55 வரையான கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையிலிருந்து நீர்கொழும்பு வரையான வடக்கு கடற்பரப்புகளும் மற்றும் மாத்தறையிலிருந்து பொத்துவில் வரையான தென்பகுதி கடற்பரப்புகளும் அவ்வப்போது கடல் கொந்தளிப்பாக அல்லது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் இது தொடர்பில் மீனவ சமூகம் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளபடுகின்றனர்.

கற்பிட்டி முதல் பொத்துவில் ஊடாக தென்பகுதிகளில் கடல் அலைகள் 2.5 முதல் 3 மீட்டார் வரை உயரும் நிலை காணப்படுவதால் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள கடற்றொழில் படகுகள் இந்த பிரதேசத்தில் இருந்து வெளியேறி பாதுகாப்பான கடல் பிரதேசத்தை நோக்கி செல்லுமாறு அனைத்து மீன்பிடி தொழிலில் உள்ளவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.