செங்கலடியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி !

560

மட்டக்களப்பு – செங்கலடியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பிலிருந்து வாழைச்சேனை நோக்கிப் பயணித்துகொண்டிருந்த கார் ஒன்று வலது பக்க வீதியோரத்தால் நடந்து சென்றுகொண்டிருந்த நபரையும் சைக்கிளில் சென்ற மற்றுமொரு நபரையும் மோதிச் சென்றுள்ளது.

இவ்விபத்து குறித்து தெரிவிக்கப்படுவதாவது…

வேகமாக பயணித்த கார்  அப்பிரதேச வீதியிலுள்ள பாதசாரிகள் கடவையில் சென்ற நபருக்கு இடமளிப்பதற்காக வேகத்தைக் குறைத்தவேளை  கார் வேகக்கட்டுப்பாட்டினை இழந்து வலதுபுறத்திற்குச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

வீதியால் சென்ற நபர்கள் வேகமாக தூக்கிவீசப்பட்டனர் இம்மயிர்க் கூச்செறியும் விபத்து அப்பிரதேச வர்த்தக நிலையமொன்றில் பொருத்தப்பட்டிருந்த சீசீரீவீ கமராவில் பதிவாகியுள்ளது.

இவ்விபத்தினால்  வர்த்தக நிலையமொன்றும்  , நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளும் பலத்த சேதமடைந்துள்ளன.

இவ்விபத்தில் காயமடைந்தவர் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்தினையடுத்து அப்பிரதேசத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாகன நெரிசல் ஏற்பட்டது.

ஏறாவூர்ப் பொலிஸார் கார் செலுத்திய நபரைக் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.