உணவு பயிர் உற்பத்தி மீதான ஆர்வத்தினை தூண்டும் விதமாக மட்டு. மாநகர சபையின் தேசிய வாசிப்பு மாதம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

12

உணவுக்கான உள்நாட்டு பயிர் உற்பத்திகள் மீதான ஆர்வத்தினை வாசகர்களுக்கு தூண்டும் விதமாகவும், இவ் உற்பத்திகளின் அவசியம் தொடர்பில் இளைஞர்- யுவதிகளுக்கு தெளிவுறுத்தும் வகையிலும் இவ்வாண்டுக்கான தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளை ஒழுங்கு செய்யுமாறு மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் பணிப்புரை விடுத்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதமானது தேசிய வாசிப்பு மாதமாக பிரகடணப்படுத்தப்பட்டு அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் இம்முறையும் மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளை திட்டமிடுதல் தொடர்பிலான கலந்துரையாடலானது இன்று (17) மாநகர முதல்வரின் தலைமையில் மாநகர குழு மண்டபத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாநகர சபையானது சிறுவர் நேய மாநகர செயற்றிட்டத்தினை முன்னெடுத்து வருவதன் காரணமாக சிறுவர்களை நோக்காக கொண்டு வாசிப்பு மாத நிகழ்வுகளை ஒழுங்கு செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக  நூலொன்றை வாசிப்போம் நாட்டை கட்டியெழுப்புவோம் எனும் கருப்பொருளிலினை மைப்படுத்தி வாசகர்களுக்கான தெளிவூட்டல்களை மேற்கொள்வது தொடர்பிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

அத்துடன் கொவிட்-19 தாக்கத்தினால் பின்னடைவைச் சந்தித்துள்ள பொருளாதாரத்தினை மீழக்கட்டியெழுப்பும் நோக்கில் உணவுக்கான உள்நாட்டு பயிர் உற்பத்திகளை அதிகரிப்பதோடு, அதன் மீதான ஆர்வத்தினை வாசகர்களுக்கு தூண்டும் விதமாகவும், இளைஞர்-யுவதிகளுக்கு உள்ளூர் உற்பத்திகளின் அவசியம் தொடர்பில் தெளிவுறுத்தும் வகையிலும் இவ்வாண்டுக்கான தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளை ஒழுங்கு செய்யவேண்டும் என்றும் மாநகர முதல்வர் தெரிவித்தார்.

மேற்படி கலந்துரையாடலில் மாநகர பிரதி ஆணையாளர் உ.சிவராஜா, சுகாதார அமைச்சின் பிராந்திய மருத்துவ அதிகாரி வைத்தியர் நவலோஜிதன், மாநகர சபையின் ஆயுர்வேத வைத்தியர் திருமதி பார்த்திபன், மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினரும் நூலகக் குழுவின் தலைவருமான வே.தவராஜா, மாநகர சபையின் நூலகம் மற்றும் மக்கள் பயன்பாட்டு நிலையியற் குழுவின் உறுப்பினர்கள், நூலகர்கள் வாசிப்பு நிலையங்களின் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட  அரச திணைக்களங்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.