மட்டக்களப்பில் அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் பயன்பாட்டிலுள்ள அரச காணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

137

மட்டக்களப்பில் இயங்கி வரும் அரச திணைக்களங்கள், மதத்தலங்கள் மற்றும் தனியார் தொழில் முயற்சிகளுக்கான பயன்பாட்டிலுள்ள அரச காணிகளை பயன்படுத்துவதற்கான அனுமதிகள் வழங்கிவைக்கப்பட்டது.

அரசாங்க அதிபர்   கலாமதி பத்மராஜாவின் தலைமையில் காணி பயன்பாட்டு திட்டமிடல் குழுக் கூட்டம் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றபோதே குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலுமுள்ள பாடசாலைகள், கல்வித் திணைக்களங்கள், சுகாதார சேவை நிலையங்கள், வைத்தியசாலைகள், விவசாய துறைசார்ந்த அலுவலகங்கள், விளையாட்டு மைதானங்கள், சிறுவர் பூங்கா உட்பட அரச கட்டிடங்கள் அமைந்துள்ள காணிகள் மற்றும் தொழில் நிமிர்த்தம் தனியார் பயன்படுத்திவரும் காணிகள் உட்பட மதஸ்தலங்கள் அமைந்துள்ள அரச காணிகளை பயன்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட விண்ணப்பங்கள் இங்கு பரிசீலிக்கப்பட்டன.

இதற்கமைவாக பிரதேச செயலாளர்கள், சுற்றாடல் அதிகார சபை, நில அளவைத் திணைக்களம், வனப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் விவசாய விரிவாக்கல் திணைக்களம் போன்ற சம்மந்தப்பட்ட திணைக்களங்களின் முறையான அனுமதி மற்றும் சிபாரிசுடனான முன்மொழிவுகளுக்கமைய குறுகிய கால மற்றும் நீண்டகால குத்தகை மற்றும் தொடர் பாவணைக்காக இவ்வனுமதிகள் அரசாங்க அதிபரினால் வழங்கப்பட்டது.